Courtesy : nagarjun - http://nagarjunan.blogspot.com/2009/02/blog-post_4720.html
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, தமிழின் மூத்த எழுத்தாளராக இருந்து, தம்முடைய 93-ஆம் வயதில் மறைந்திருக்கிறார் கிருத்திகா. நேற்றிரவு அவர் மறைவுச் செய்தி என்னை அடைந்தது.
எண்பதுகளின் தொடக்கத்தில் பம்பாய் நகரில் வசித்தேன். என் வாழ்க்கையின் கொந்தளிப்பான காலமது. அப்போது அங்குள்ள தமிழ்ச்சங்கத்தில் இருந்த ஆதிலட்சுமணன், ஒருநாள், எனக்கு ஃபோன் செய்து “மாலை சீக்கிரம் வந்துவிடுங்கள்” என்றார். “கிருத்திகா வருவார், நீங்கள் அவருடன் பேசலாம். இரண்டு மணி நேரம் இருப்பார். நீங்கள்தான் அவரைக் கொண்டு கார் இருக்கும் இடத்தில் விடவேண்டும்.”
கிருத்திகாவை முதலில் சந்தித்ததும் அவரை எனக்குப் பிடித்துவிட்டது. வாசவேஸ்வரம் உள்ளிட்ட அவருடைய நாவல்களை வாசித்து சில மாதங்களே ஆகியிருந்த தருணமது. தர்ம க்ஷேத்ரே என்ற நாவலில் ஃப்ரைட்ரிக்ஹ் நீட்ஷ பற்றிய குறிப்பை வாசித்து ஆச்சர்யப்பட்டிருந்தேன்… மிக இயல்பாகப் பேசினார். வாசவேஸ்வரம் நாவலைத்தான் அதிகம் பேசினோம். பிறகு புகை நடுவில், நேற்றிருந்தோம், தர்மக்ஷேத்ரே, சத்யமேவ, பொன்வண்டு, போகமும் யோகமும், தீராத பிரச்னை, புதிய கோணங்கி எனப் பேசிக்கொண்டேயிருந்தோம். ஆதிலட்சுமணன் எங்களைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டார். நாற்பதாண்டுக்குமேல் வயது வித்தியாசம் கொண்ட நாங்கள் இருவரும் மிக இயல்பாக சயான்-மாதுங்கா பகுதியில் காப்பி அருந்திவிட்டு அங்குள்ள நடைபாதைக்கடைகளில் திரிந்தோம். கார் வரவில்லை…
எனக்கு அந்த சமயத்தில் பெண்நண்பர்கள் யாருமிருக்கவில்லை. ஓரக்கண்ணால் அவரைக் கவனித்தேன். பெண்நண்பர்கள் இருந்திருந்தாலும், கிருத்திகா என்னை மிக வசீகரித்திருப்பார்தான். ஆம், அவரை முத்தமிட விரும்பினேன். எனக்கென்னவோ வாசவேஸ்வரம் நாவலின் ரோஹிணியும் பிச்சாண்டியும் நாங்களாக நடந்துசெல்வது போலத் தோன்றியது. அவரிடம் பயந்து அதைக் கூறினேன்… கிருத்திகாவுக்குக் காது சுத்தமாகக் கேட்காது. அந்த இரைச்சலில் நான் கூறியதை எப்படியோ புரிந்துகொண்டு புன்னகைத்தார். அந்த நடைபாதையில், பெயர்பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் ராபர்ட் மூசில் எழுதிய குணங்களற்ற மனிதன் (Der Mann ohne eigenschaften) நாவலின் இரு தொகுதிகளை நான் வாங்கிய போது அவருடைய கார் ஓட்டுநர் வந்துவிட்டிருந்தார். அவர் கூப்பிட்டதும் கிருத்திகாவுக்குக் கேட்காததால், நான் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. சிரித்தார்…
இரண்டு ஆண்டுகள் கழித்து நாகர்கோவில் சென்று எழுத்தாளர் சுந்தர ராமசாமியைச் சந்தித்த போது, அவர் அங்கிருந்த வடிவீஸ்வரம் அக்ரஹாரத்துக்கு என்னைக் கூட்டிச்சென்றார். கிருத்திகாவின் நாவலை, அதாவது வாசவேஸ்வரத்தைத் சிலாகித்துத்தான் பேசினோம்! அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது கிருத்திகாவின் ஊரான பூதப்பாண்டிக்குச் சென்றுவிட்டுத் திருவனந்தபுரம் சென்றேன். பிறகு பெங்களூர் வாசத்தில் எழுத்தாளர் ஆதவனுடன் கிருத்திகா பற்றி நிறைய பேசுவேன்.
ஏழாண்டுகள் கழிந்து சென்னையிலிருந்து ஹைதரபாத் சென்றபோது கிருத்திகாவைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பின்போது என்மீது அன்பைப் பொழிந்தார்… அதுவரை கிருத்திகாவின் எந்த நாவலுக்கும் இரண்டாம் பதிப்பு வந்திருக்கவில்லை. நண்பர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் முன்முயற்சி செய்து கிருத்திகாவின் வாசவேஸ்வரம் நாவலின் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவந்தார். முதல் பதிப்பில் இருந்த கோபுலுவின் ஓவியங்கள் இதிலும் உண்டு, ஆனால் அட்டை வான்கோவின் ஓவியம். அதற்கான பின்னுரையை எழுதும் பொறுப்பை எனக்களித்தார் பன்னீர்செல்வன். கம்யூனிசம், சோவியத் ருஷ்யா ஆகிய கனவு கலைந்த நிலையில், மிகத்தீவிரமான மனோநிலையில் அதை எழுதினேன். என் பின்னுரையில் இந்திய அதிகார வர்க்கம் பற்றிய க்டுமையான விமர்சனம் வரும். அதாவது, கிருத்திகா நகைச்சுவையுடன் எழுதியிருப்பதை, நீட்ஷ-வின் பார்வையுடன் கூடியதாக, உயர்த்தி எழுதினேன். பிறகு கிருத்திகாவின் நீண்ட நாள் நண்பர் பெ. கோ. சுந்தரராஜன் என்ற சிட்டியைச் சந்தித்தபோது இந்திய அதிகார வர்க்கம் குறித்த விமர்சனம் பற்றிக் கொஞ்சம் மனத்தாங்கலுடன் பேசினார். ஆனால் அதிகார-வர்க்கத்தை அவ்வளவு நெருக்கத்திலிருந்து கண்டிருந்த கிருத்திகாவுக்கு அது ஒரு பிரச்னையாக்வே இருக்கவில்லை!
ஹைதராபாதிலிருந்த கிருத்திகா பிறகு சென்னைக்கே வந்துவிட்டார். மைலாப்பூர் சந்துபொந்துகளில் தேடி எங்கள் வீட்டுக்கும் வந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருடைய புத்தகங்கள் பல – நாவல்கள், குறுநாவல்கள், குட்டிப்பாட்டி கதைகள், ஆங்கிலத்தில் சிறார் ராமாயணம், பாரதம், விக்கிரமாதித்தன் கதைகள், சோழர் காலக் கோயில்கள் இரண்டைப் பற்றிய ஆய்வு இவற்றையெல்லாம் மறுவெளியீடு செய்ய வேண்டும், ஓவியங்களைக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது…
பேசப்பேச, என் அன்னையார் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதால் அவர்வழி எங்கள் தூரத்துக்குடும்ப உறவினர் கிருத்திகா என்பதும் தெரிய வந்தது… இவற்றினாலோ என்னவோ எங்கள் நெருக்கம் குறைந்தது. அவருடைய வீட்டுக்குப்போய் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தேன். ஒருநாள் ஃபோனில் “உனக்கு வேறு பெண்நண்பர்கள் வந்துவிட்டார்களா?” என்றுகூடக் கேட்டார்… நான் லண்டன் வந்த பிறகு அவர் பெங்களூர் சென்றுவிட்டார் என்று அறிந்தேன். கடந்த எட்டாண்டுகளில் ஒரேஒரு முறைதான் தொடர்பு. பிறகு தொடர்பே அற்றுவிட்டது. தீராக்காதலின் ஒருவித இயல்புதான் இது என்று இப்போது தோன்றுகிறது.
பம்பாயில் சந்தித்த போது எனக்கு வந்த அதே காதல் உணர்வை, நேற்றிரவு அவர் மறைந்த செய்தி கேட்டபோது, மீண்டும் பெற்றேன்… அந்த உணர்வை சிலாகிக்கும் வகையில் வாசவேஸ்வரம் நாவலின் இரண்டாம் பதிப்புக்கு நான் எழுதிய பின்னுரையை விரைவில் வெளியிடுகிறேன்.
படங்கள் - மறைந்த கிருத்திகா, வாசவேஸ்வரம் நாவலின் இரண்டாம் பதிப்பில் அட்டையாக வான் கோவின் ஓவியம்.